உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம்

Published On 2022-10-29 12:06 IST   |   Update On 2022-10-29 12:06:00 IST
  • சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
  • நாளை மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

விழாவையொட்டி காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அடிவாரத்தில் உள்ள நஞ்சுஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. திருவீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சக்தியிடம் வேல் வாங்குதல், சப்பரத்தில் எழுந்தருளல், பல வடிவங்கள் எடுத்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆகியன நாளை மாலை 5மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

இதேப்போல் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில்,விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் ,அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் மற்றும் திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் , அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

Tags:    

Similar News