உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்.

தளவாட பொருட்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை- மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2023-06-22 10:43 GMT   |   Update On 2023-06-22 10:43 GMT
  • அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.
  • பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு தளவாடப்பொருட்கள் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களிடமிருந்து 21.4.2022அன்று அறிக்கை பெறப்பட்டது, அதன்படி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998ன் படி மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டது.

மூன்று நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில், தளவாடப் பொருட்களுக்கான உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாநகராட்சி ஆணையாளரின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோர உரிய அரசு வழிகாட்டுதலின்படி, 17.5.2022 அன்று ஒரு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு 30.5.2022 அன்று இ-டெண்டர் இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

மேற்படி ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளனர்.மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளின்படி ஒப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு மாமன்றத்தின் தீர்மானத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி குறைவான ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்திற்கு விநியோக உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தளவாடப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பெறப்பட்ட தளவாடப் பொருட்கள் நான்கு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தளவாடப்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிலர் சமூகவலைதளங்களில் தகவல்களை பரப்பினர். இதையடுத்து மேயர், ஆணையாளர், துணைமேயர் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், தொடர்புடைய கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு எவ்வித விதிமீறல்களும் நடைபெறவில்லை எனவும், முறையாக வழிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொருளுக்கும், விநியோகம் செய்யப்பட்ட பொருளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . இது போன்ற உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News