உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

Published On 2023-10-07 11:24 GMT   |   Update On 2023-10-07 11:54 GMT
  • அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
  • அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News