உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தீவனம்-பராமரிப்பு செலவு அதிகரிப்பால்பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-07-16 05:15 GMT   |   Update On 2022-07-16 05:16 GMT
  • அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது.
  • அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழக அரசு கடந்த 2019 ஆகஸ்டு 19ல் பால் விலையை உயர்த்தியது. அதற்கு பின் 4 ஆண்டாக பால் விலை உயர்த்தாத நிலையில் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது. அப்போது, கொழுப்புச்சத்து 4.3, புரதச்சத்து 8.2 உள்ள பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 27 முதல் 29 ரூபாய் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.4 ஆண்டுக்கு முன் மாட்டுக்கு வழங்கப்படும் கலப்புத்தீவனம் விலை கிலோ ரூ. 12 ஆக இருந்தது. தற்போது 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.பருத்தி ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், மக்காச்சோளம் மாவு 15 ரூபாயாக இருந்தது 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

புண்ணாக்கு ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்தது தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் ஒரு ஏக்கர் சோளத்தட்டு 5 ஆயிரமாக இருந்தது 15 ஆயிரமாகவும், வைக்கோல் ஒரு கட்டு 30 ரூபாயாக இருந்தது, தற்போது 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆட்கள் கூலி, மருந்து, பராமரிப்பு, தீவனம் என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை 4 ஆண்டாக உயர்த்தப்படவில்லை.

அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே தனியார் நிறுவனங்களும் விலை உயர்த்தும்.எனவே அரசு பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டு பால் லிட்டர் 42 ரூபாய்க்கும், எருமை பால் 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்கவும், கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.

ஆவின் நிறுவனம் தினசரி பால் கொள்முதலை ஒரு கோடி லிட்டராக உயர்த்தும் வகையில் கட்டுமானம் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.ஆவின் நிறுவனம் கால்நடை டாக்டர்களை நியமிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பருவமழை சீசனின் போது, கால்நடைகள் பராமரிப்பில், அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோய்த்தாக்குதல் இந்த சீசனில் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, இத்தகைய சீசனில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத்துறை சார்பில் கிராமந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கால்நடை மருந்தகங்களில், மானியத்தில் உலர் தீவனம் வினியோகிக்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News