உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விவகாரம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

Published On 2022-10-20 12:32 IST   |   Update On 2022-10-20 12:33:00 IST
  • ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.
  • அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

 திருப்பூர்: 

திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: -

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மாத ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நலச்சட்ட விதிகளின்படி, தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை ஒப்பந்தம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பபட்டுள்ளது.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ. 3750 தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கடிதத்தின் படி, ஒப்பந்ததாரர்கள் தீபாவளிக்கு முறையான போனஸ் வழங்கும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த காலங்களை போல் பெயரளவுக்கு கொடுக்காமால், முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்த உரிமையாளர்கள் வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு பணி மூப்பு மற்றும் படிப்புக்கு ஏற்ப பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

உரிய தகுதி இருந்தும், பதவி உயர்வு இன்றி தூய்மைப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர். ஆனால் அதேசமயம் கல்வித்தகுதி இல்லாத பலர், மாநகராட்சி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் கூறியிப்பதாவது:-

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீபாவளிக்கு அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக, தேவைப்படும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதேபோல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கள ஆய்விலும் ஈடுபடும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News