உள்ளூர் செய்திகள்

பழங்கால சுமைதாங்கி கல்லை படத்தில் காணலாம். 

உடுமலை அருகே பழங்கால சுமைதாங்கி கல் கண்டெடுப்பு

Published On 2023-05-09 08:37 GMT   |   Update On 2023-05-09 08:37 GMT
  • பழங்கால கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய சின்னங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.
  • ஆய்வினை முனைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொண்டனர்.

உடுமலை:

உடுமலை தாராபுரம் சாலையில் துங்காவி – பாறையூர் பகுதியில் சுமைதாங்கிக் கல் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் சீலநாயக்கன்பட்டியைச் சார்ந்த கோபால் என்பவரின் மகள் நினைவாக இந்த சுமைதாங்கிக் கல் வைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

இந்த சுமைதாங்கி கல் முற்காலங்களில் ஒவ்வொரு ஊரின் முகப்பிலும், அல்லது இறுதியிலும் அந்தப்பாதையில் சுமையோடு செல்லும் வணிகர்கள், சுமைதூக்கிச்செல்வோர், மற்றும் சுமையோடு செல்லும் பெண்கள் தன்னுடைய சுமையினை இறக்கி வைக்க இயலாமல் நடந்து செல்லும்போது அதே அளவிற்கு உயரமாக அதாவது நான்கு அல்லது ஐந்தடி உயரத்தில் சம அளவில் பலகைக்கல் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பலகைக்கல்லில் தன்னுடைய சுமையினை இறக்கி வைத்து இளைப்பாறிச்செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

இந்த சுமைதாங்கிக் கல்லும், சுமைதாங்கிக்கல்களின் தேவையும் தற்காலத்தில் தேவையில்லாமல் இருந்தாலும், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் மற்றவர்களின் மனதறிந்து, சுமையோடு செல்லும் பெண்களுக்காகவும், மற்ற வணிகர்களுக்காகவும் இது போன்று சுமைதாங்கிக்கற்களைஅமைத்திருந்தனர். இன்று அந்த சுமைதாங்கிக் கற்களின் தேவையும் பயன்பாடும் இல்லாவிட்டாலும் அதனைப்பற்றிய புரிதல்களும் நம் முன்னோர்களின் ஈகை மனப்பான்மையினையும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இது போன்ற பழங்கால கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய சின்னங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இந்த சுமைதாங்கிக்கல் ஆய்வினை முனைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News