உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் நகை கொள்ளை

Published On 2023-06-25 15:37 IST   |   Update On 2023-06-25 15:37:00 IST
  • நகைகளை திருடிய மர்மநபர்கள் நைசாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
  • தெற்கு போலீஸ் நிலையத்தில் ஜீவிதா புகார் அளித்தார்.

திருப்பூர்:

திருப்பூர் பவானிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜீவிதா. இருவரும் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று இரவு திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வழிக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறினர்.

அப்போது பஸ்சில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தாராபுரம் ரோடு அருகே வந்த போது ஜீவிதா தனது கையில் இருந்த பேக்கில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பேக்கின் ஜிப் திறந்து இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேக்கின் உள்ளே பார்த்த போது அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. ஜீவிதா உடனே சத்தம் போடவும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் நகைகளை திருடிய மர்மநபர்கள் நைசாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் ஜீவிதா புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News