உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் - தொழில்துறையினர் கோரிக்கை

Published On 2023-08-21 04:29 GMT   |   Update On 2023-08-21 04:29 GMT
  • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும்.
  • கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.

 திருப்பூர்:

கோவை மண்டல அளவிலான மாஸ்டர் பிளான்-2047 திட்டம் தயாரிக்கும் பணியை நகர் ஊரமைப்புத்துறை தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. திட்ட அறிக்கை தயாரிக்கும் முன்பு, திருப்பூர் பனியன் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தொழில்துறையினருடன் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் புஷ்பராஜ் வரவேற்றார். சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக்குழு உறுப்பினர் சண்முகராஜ், திருப்பூர் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்று, திருப்பூரின் எதிர்கால தேவைகள் குறித்து பேசினார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள ரெயில்வே கூட்ஷெட்டை விரைவில் வஞ்சிப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வேண்டும்.

விளையாட்டு அரங்கம் பெரிய அளவில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு பின்னலாடைகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாநகரை தொழில் நகருக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News