உள்ளூர் செய்திகள்

போடிப்பட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கிய போது எடுத்த படம்.

உடுமலை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

Published On 2023-11-14 10:26 GMT   |   Update On 2023-11-14 10:26 GMT
  • பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
  • ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

உடுமலை:

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், போடிப்பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதி முருகன் கோவில்கள் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண வண்ண மின்விளக்குகளால் விழா கோலம் பூண்டுள்ளது.

முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகப்பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தும், காப்பு கட்டியும் விரதம் தொடங்கி உள்ளனர்.

பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழாவில் காலை 10 மணியளவில் ஞானதண்டாயுதபாணி, சாது சன்யாசி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் இந்திர விமானத்தில் சுவாமி திரு வீதி விழா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேடர் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

நாளை (புதன் கிழமை) பாலசுப்பிரமணியர் அலங்காரம் மற்றும் யானை வாகனத்தில் திருவீதி உலா, வியாழக்கிழமை வைதீகாள் அலங்காரம், சின்னமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அம்மையப்பன் பூஜை செய்து சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும்.

நிகழ்வின் உச்சமான சூரசம்காரம் வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் வீடுகளில் விரதமிருக்க தொடங்கினர்.

Tags:    

Similar News