உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

இயற்கை சார் உற்பத்தியை பாராட்டி 100 ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று

Published On 2023-07-09 04:11 GMT   |   Update On 2023-07-09 04:11 GMT
  • இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் ‘ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார்.

திருப்பூர்:

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் 'ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது. திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் 'ஜெட்' தரச்சான்று பெற விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேருக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கப்பட்டது.

இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. டீமா தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கி பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார். பின்னர் தரச்சான்று பெறும் வழிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.

டீமா பொருளாளர் சுபாஷ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை உதவி இயக்குனர் மனீஷ் வசிஸ்தா, துணை மேலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தொழில்துறையினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இயக்குவதற்கு அங்கீகாரமாக 'ஜெட்' தரச்சான்று பெற்று பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் டீமா சங்கம் சார்பில் திருப்பூர் பேஷன் இன்ஸ்டிடியூட் புதிதாக தொடங்கப்பட்டது. நூல், நிட்டிங், பேட்டர்ன் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மெர்ச்சன்டைசிங், காஸ்ட்டிங் அண்ட் புரோகிராமிங், ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, தர மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடிந்ததும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முழுநேரம், பகுதி நேர பயிற்சியும் உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News