உள்ளூர் செய்திகள்

அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட காட்சி.

உடுமலையில் 2 கோவில்களுக்கு சொந்தமான ரூ. 6.60 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு

Published On 2022-08-26 04:54 GMT   |   Update On 2022-08-26 04:54 GMT
  • மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • மீட்கப்பட்ட இடங்களில் கோவில் சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் உள்ளன. கோவில்களுக்கான தினசரி பூஜை, பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான வருவாயைப் பெறும் வகையில் வழங்கப்பட்ட இந்த கோவில் நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.அவற்றை மீட்டெடுக்க தற்போது அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உடுமலை தாலுகா வாகத்தொழுவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் திருப்பூர் இணை ஆணையரின் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் ரூ. 3 கோடி மதிப்புள்ள 10.69 ஏக்கர் நிலத்தை தானாகவே ஒப்படைக்க முன் வந்தனர். மேலும் கொங்கல்நகரம் மாரியம்மன், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 17.88 ஏக்கர் புன்செய் நிலத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஒப்படைக்க முன்வந்தனர். இதனையடுத்து திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இடம் மீட்கப்பட்டு கோவில் சார்பாக அந்த இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

உடுமலை தாலுகாவில் 2 கோவில்களுக்குச் சொந்தமான ரூ. 6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 28.57 ஏக்கர் புன்செய் நிலங்கள் மீட்கப்பட்ட தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News