உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-06-22 10:00 GMT   |   Update On 2023-06-22 10:00 GMT
  • ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.73-க்கு மட்டுமே அரசு வழங்குகிறது.
  • தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

தாராபுரம்:

தாராபுரத்தில் தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் பிரபுராஜா தலைமை தாங்கினார்.

அப்போது தென்னை மரங்கள் வளர்ப்பு மற்றும் தென்னையினால் கிடைக்கும் பொருட்களை எப்படி? பணமாக மாற்றுவது தென்னை கழிவுகளை விவசாய நிலங்களுக்கு எவ்வாறு உரமாக மாற்றுவது போன்ற ஆலோசனைகளை வழங்கி தென்னை விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:-

தென்னை விவசாயிகளை கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை ரூ.108.60 பைசா உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.73-க்கு மட்டுமே அரசு வழங்குகிறது. ஒவ்வொரு தென்னை விவசாயிக்கும் கொப்பரை தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.35 நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசு எம்.எஸ்.பி.சாமிநாதன் கமிட்டியின் மூலம் வழங்கப்படும் ஆதார விலையை சட்டப்பூர்வ விலையாக அங்கீகரிக்க வேண்டும்.

ஆதார விலையை விட குறைவாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காயை வாங்கும் இடைத்தரகர் மற்றும் அரசு கொள்முதல் கூடங்களில் வாங்கினால் வாங்கப்படும் நபர் அல்லது அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

எனவே மத்திய அரசாங்கம் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெயை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்னை விவசாய மேம்பாட்டுக்குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. இதை தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News