பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்படும் சாய தொழிற்சாலை -விவசாயிகள் புகார்
- அரிசி ஆலை நீண்ட காலமாக செயல்பாடு இன்றி பூட்டி கிடந்தது.
- சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த அரிசி ஆலை நீண்ட காலமாக செயல்பாடு இன்றி பூட்டி கிடந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அரிசி ஆலையில் இரவு நேரங்களில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. வேலைக்கு செல்பவர்கள் யாராவது தங்கி இருப்பார்கள் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கருதி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு உள்ளே சென்று பார்த்த போது வேஸ்ட் காட்டன் என்று சொல்லப்படும் துணிகளை கொண்டு வந்து அதற்கு சாயம் ஏற்றும் தொழில் நடைபெற்று வருவதை கண்டு பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சாயக்கழிவு நீரை அங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் விடுவதும் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தொழிற்சாலையால் சேமலைக்கவுண்டபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலைக்கு எந்த அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய மின் இணைப்பில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.