உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் கிராமங்களில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பு செய்ய கோரிக்கை

Published On 2022-10-11 04:40 GMT   |   Update On 2022-10-11 04:40 GMT
  • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்லடம் :

தமிழகத்தில் கிராமபுறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும்,உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தவும், கடந்த 2006 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.

மேலும் பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம் சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் கடந்த, 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

தற்போது அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி மாயமாகி வருகிறது.

மேலும் விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள், துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, மொபைல்போனில் மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.அதே போல், விளையாட்டில், சாதிக்க நினைப்பவர்களுக்கும், கிராமங்களில், எவ்வித வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து, மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும்.கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News