உள்ளூர் செய்திகள்

 கூட்டத்தில் முத்திரை ஆய்வாளர் செல்வக்குமார் பேசிய போது எடுத்த படம்.

அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்களும் பொட்டலப்பொருட்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

Published On 2023-04-27 08:07 GMT   |   Update On 2023-04-27 08:07 GMT
  • ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும்.

திருப்பூர் :

பின்னலாடை நிறுவனங்களில் தொழில்துறை (முத்திரை) அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். எடையளவு மற்றும் பொட்டல பொருட்கள் விதிமுறைகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பதிவு பெறுவதால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் சட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு திருப்பூர் சைமா சங்க அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசந்தர், பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் சுகந்தி, எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கி கூறியதுடன், தொழில்துறையினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். தொழில்துறை முத்திரை ஆய்வாளர் செல்வக்குமார் பேசும்போது, 'அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்களும் பொட்டலப்பொருட்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். பின்னலாடைகளை அனுப்பி வைக்கும் பெட்டிகளில் பெரிய பரப்பளவு உள்ள பகுதியில் 40 சதவீதம் அளவுக்கு, நிறுவனத்தின் விவரம், பனியனின் விலை, தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். பொட்டலப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் பதிவு செய்வது அவசியம்' என்றார்.

வர்த்தக முத்திரை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து வக்கீல் கிஷோர் பாலசுப்பிரமணியம் விளக்கி கூறினார். இதில் சைமா சங்க உறுப்பினர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News