திருப்பூர்-பல்லடம் சாலையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
திருப்பூர் மாநகர் முழுவதும் அதிரடி சோதனை - உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வைத்து நகை பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவ தாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவுக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகரில் அனைத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திடீர் வாகன சோதனை நடைபெற்றது. முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.
திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.