உள்ளூர் செய்திகள்

அன்பகம் திருப்பதி.

பாரப்பாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும் - மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் மனு

Published On 2023-03-11 07:19 GMT   |   Update On 2023-03-11 07:19 GMT
  • புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.
  • தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசல் நான்கு முக்கு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது. இதனால் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளியின் முன் உள்ள ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும். அதுவரை அங்கு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

அதே ரோட்டில் குமரன் மகளிர் கல்லூரியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். மாலை 4 மணிக்கு கல்லூரி முடியும் நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் கல்லூரியின் வாசலில் நிறுத்தி பயணிகளை ஏற்ற போட்டி போடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்கள் மூலம் மாணவிகளை அழைக்க வரும் 400-க்கும் மேற்பட்ட பெற்றோர் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் பிரச்சினை ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News