உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே திருட்டு வழக்குகளில் 3பேர் கைது

Published On 2022-12-08 07:49 GMT   |   Update On 2022-12-08 07:49 GMT
  • கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது.
  • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பல்லடம் :

பொங்கலூர் எஸ். ஏ. பி ஸ்டார் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 60) என்பவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது. அதுபோல் கொடுவாய், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டேகால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. மேலும் பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.90 ஆயிரம் திருடு போனது.

அதுபோல் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கோவை வெள்ளமடை, வையம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் பால்கார செந்தில் (52), திருப்பூர், சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் சுரேந்திரன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அது போல் இந்த திருட்டுச் சம்பவத்தில் நகைகளை வாங்கிய கோவை பிரபு நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகன் செந்தில்குமார் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10.50 தங்க நகைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய பால்கார செந்திலின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News