பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலையில் திடீர் மறியல்
- 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை என புகார்
- போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி- சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்த வருகிறது. ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, மற்றும் அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை.
இதனால் அப்பகுதி பொது மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர் இது குறித்து நகராட்சி அலுவல கத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த மாதம் 29-ந்தேதி சாலை மறியல் செய்தனர்.
அப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் இது வரை தண்ணீர் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் மீண்டும் இன்று காலை சந்தைகோடியூர் பஸ் நிருத்தம் அருகே வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் மறியல் செய்தனர்.
அப்போது திருப்பத்தூர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது பொது மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.