உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

போதிய வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி

Published On 2022-12-07 09:32 GMT   |   Update On 2022-12-07 09:32 GMT
  • புதிய பள்ளி கட்டிடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்
  • மாணவர்களை மரத்தடியில் உட்கார வைத்து பாடம் நடத்துவதாக புகார்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பள்ளி வளாகத்தில் நின்றதாலும், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு கருதி வளையாம்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சில மாதங்களாக பள்ளி இயங்கி வந்தது.

பாதுகாப்பு கருதி சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளி கட்டிடங்கள் கட்ட தடையாக உள்ளது என கூறப்படுகிறது.

தற்காலிகமாக பள்ளி இயங்கி வந்த அரசு கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலே பள்ளி இயங்க தொடங்கினர்.

இங்கு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்கள் அமர வைத்தும், ஆசிரியர்கள் தனித்தனியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

சில வகுப்புகள் மரத்தடியில் மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவர்கள் மீது அவ்வப்போது விழுந்து மாணவர்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று சில மாணவர்களுக்கு பூச்சிகள் கடித்து அதிகமாக அரிப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்ற தகவல் கல்வி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தகவலின் பேரில் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அதிகாரி சித்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரியை முற்றுகையிட்ட பகுதி மக்கள் சம்பவம் குறித்து பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர் மாற்ற வேண்டும், அதே நேரத்தில் பள்ளி கட்டிடமும் விரைவாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News