உள்ளூர் செய்திகள்

பல்லாவரத்தில் 600 வலி நிவாரண மாத்திரைகளுடன் 3 பேர் கைது

Published On 2022-07-01 13:58 IST   |   Update On 2022-07-01 13:58:00 IST
  • பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
  • மும்பையில் இருந்து மாத்திரைகளை மொத்தமாக கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர்.

தாம்பரம்:

தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பைசல், ஜகருல்லா, உதய சீலன் என்பதும் போதை மாத்திரைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் சோதனை செய்தபோது மொத்தம் 600 போதை தரும் வலி நிவாரண மாத்திரைகள், 100 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து இந்த மாத்திரைகளை மொத்தமாக கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறுபகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறும்போது, வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் பல்வேறு தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பல இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News