உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரி அருகே இன்றுகாலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-06-27 10:47 GMT
  • எரியாத மின்விளக்குகள், போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள், தெருவில் ஓடும் சாக்கடை என்று எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை.
  • இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்டது சிவானந்தபுரம். இங்கு 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளதாகவும் அதனை சுத்தப்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு குழாயில் வரும் தண்ணீரை நம்பியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையுள்ளதாக தெரிகிறது. மேலும் எரியாத மின்விளக்குகள், போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள், தெருவில் ஓடும் சாக்கடை என்று எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை வெங்கடாபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மகாராஜா கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. அங்கு செல்லும் வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் மாணவ, மாணவிகள் வெகுநேரம் தவித்து பின்னர் நடந்தே சென்றனர்.

சிவானந்தபுரம் மக்களின் கோரிக்கைகள் அதிகாரிகளின் காதில் இனியாவது விழுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

Similar News