உள்ளூர் செய்திகள்

மலர் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- தேக்கடி மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Published On 2023-05-11 05:28 GMT   |   Update On 2023-05-11 05:28 GMT
  • தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கியது.
  • நீட்டிக்கப்பட்ட நாட்களில் புதியதாக கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கியது.

நூற்றுக்கணக்கான மலர் வகைகள், அலங்கார செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. தற்போது தமிழகம்-கேரள மாநிலம் பகுதியில் கோடை விடுமுறை காலமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில்,

மலர் கண்காட்சி கடந்த ஏப். 1-ந் தேதி முதல் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம், அதாவது வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நாட்களில் புதியதாக கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News