தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
- மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டா ம்கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜைகளை முடித்தார்.
அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும். ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர்ஆகியோர் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவில் மாசிமகத் தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, பல்வேறு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா, பூஜைகள், திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று தொடங்கியது. கோவில் எதிரே விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து, பக்தர்கள் பொரி, உப்பு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவ தானியங்களை தேர்கள் மீது இறைத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமிகளை வழிபட்டனர்.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை சுவாமிகளின் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர் திருவிழாவுக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.