உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டர்களை கண்டித்து மாணவ-மாணவிகள் திடீர் மறியல்

Published On 2022-08-10 08:15 GMT   |   Update On 2022-08-10 08:15 GMT
  • திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
  • அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து இன்று குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமத மானது.

இதனால் வழக்கமாக அந்த வழியில் இயங்கி வரும் 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர். அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இதுகுறித்து மாணவி மவுனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி கூறியதாவது:-

வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் 8-ம் எண் மற்றும், 5-ம் எண் கொண்ட பேருந்துகளில் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள் இடம் இல்லை எனக் கூறி இறக்கி விடுகிறார்கள்.

பள்ளிக்கு நேரமாகிவிட்டது என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.

நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேர ஆகிறது. பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாண-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News