உள்ளூர் செய்திகள்

ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-03-27 09:48 GMT   |   Update On 2023-03-27 09:48 GMT
  • ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
  • ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில், 109 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள படேதலாவ் ஏரிக்கு (பெரிய ஏரி) மார்க்கண்டேயன் நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் மார்க்கண்டேய நதியில் நீர்வரத்து முற்றிலும் நின்றதால் படேதலாவ் ஏரியும் வறண்டது. கடந்த, 2019ல் ஆந்திராவில் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பியது.

பின்னர் மழையின்றி ஏரி வறண்ட நிலையில், கடந்த ஆண்டு மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் அக்டோபரில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஏரி நீரை நம்பி ஏரியின் கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை துவங்கினர்.

தற்போது 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பாதி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவர்கள் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதாலும், ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாலும், இந்த நீரை நம்பி விவசாயப் பணியை துவக்கினோம். ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளவர்கள், ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இந்த தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

எப்போதாவதுதான் இந்த ஏரி நிரம்பும் நிலையில், தற்போது நிரம்பியுள்ள தண்ணீரையும் மீன் குத்தகைதாரர்கள் திறந்துவிட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் இருந்த வெளியேறும் தண்ணீரை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News