உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அதிகரிக்கும் கொரோனா தொற்று கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விடும் பொதுமக்கள்

Published On 2022-07-08 13:13 IST   |   Update On 2022-07-08 13:13:00 IST
  • தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
  • பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் முக கவசம் இல்லாமல் மக்கள் சுற்றித் திரிவதை காண முடிகிறது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் காணொலி காட்சி மூலம் அழைத்து கட்டுப்பாடுகளை தீவிரபடுத்தும் படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடினால் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் அரசு வழிகாட்டுதலின்படி குறைவான நபர்களே பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பள்ளி மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இது போன்ற கட்டுப்பாடுகள் பல இடங்களில் மீறப்பட்டு வருகிறது.

பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் முக கவசம் இல்லாமல் மக்கள் சுற்றித் திரிவதை காண முடிகிறது.

கடந்த பல மாதங்களாக மாவட்டத்தில் தொற்று இல்லாமல் இருந்தது. அதன் பிறகு ஒற்றை இலக்கத்தில் தொடங்கி தற்போது இரட்டை இலக்கத்தில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாடுகளை அறிவித்தபோதும், மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

அண்டை மாவட்டங்களான மதுரை, தேனியில் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது போன்ற நிலை இங்கும் வராமல் இருக்க மக்கள் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுகைளை கடைபிடிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் மக்கள் அச்சமின்றி நடமாடி தொற்றை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News