உள்ளூர் செய்திகள்

பந்தலூரில் போலீஸ் சோதனைச்சாவடியை புதுப்பிக்க வேண்டும்

Published On 2022-08-11 10:05 GMT   |   Update On 2022-08-11 10:05 GMT
  • மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணிக்க பூலக்குன்று பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
  • போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் இருந்து நெல்லிமேடு வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது.

அப்பகுதியில் ரேஷன் அரிசி, அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கவும், மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணிக்கவும் பூலக்குன்று பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சோதனைச்சாவடியில் கண்காணிப்பு அறை மிகவும் சிறிதாக உள்ளது. இதனால் போலீசார் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் பணி நேரம் முடிந்த பிறகு ஓய்வெடுக்க இயலாத சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்யும் போது, அதில் நனைந்து போலீசார் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சோதனைச்சாவடியை சுற்றிலும் அபாயகரமான மரங்கள் உள்ளன.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் பலத்த சத்தத்துடன் அசைந்தாடுகிறது. இதனால் எப்போது வேண்மானாலும் மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக போலீசார் அச்சத்துடன் பகல், இரவு நேரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பூலக்குன்று சோதனைச்சாவடியில் கழிப்பறை மிகவும் சிறிய அறையில் உள்ளது.

போதுமான இடவசதி இல்லாததால் போலீசார் பணிபுரிவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. சோதனைச்சாவடியை சுற்றிலும் வளர்ந்து உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. தொடர் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது. எனவே, மாவட்ட மற்றும் மாநில எல்லையில் பணிபுரியும் போலீசாரை கருத்தில் கொண்டு போதுமான இடவசதியுடன் பூலக்குன்று சோதனைச்சாவடியை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News