சின்னமலையூரில் கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
நத்தம் அருகே மலை கிராமங்களில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
- சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார்
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர், குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மலையூர், சின்னமலையூர், பள்ளத்துக்காடு, வலசு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன.
சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மலைவாழ் மக்களிடம் பேசிய அவர் விரைவில் மலையூர் கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்கப்படும், ஒவ்வொரு மாதம் மருத்துவ உதவிகள் செய்ய 2 செவிலியர்கள் அனுப்பபடுவார்கள் .
தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும், தகுதியுள்ள மலை கிராம மக்களுக்கு தனி நபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த ஊருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், தாசில்தார் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.