உள்ளூர் செய்திகள்

ஆவடி, தாம்பரத்தில் விதிமுறை மீறி வைக்கப்படும் பேனர்கள்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2023-07-06 07:30 GMT   |   Update On 2023-07-06 07:30 GMT
  • தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
  • தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆவடி:

விதிமுறைகள் மீறி பேனர்கள் வைத்தால் 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த மாதம் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஏராளமான பேனர்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்னமும் சில இடங்களில் பேனர் கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. விதிகளை மீறி வைக்கும் பேனர்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய ராணுவ சாலை, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நகரமைப்பு பிரிவில் அதிகாரிகள் இல்லாததால் பேனர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதேபோல் தாம்பரம் பகுதியில் பேனர் கலாச்சாரம் மெல்ல தலைதூக்கத் தொடங்கி உள்ளது. செம்பாக்கம், கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை, முடிச்சூர் சாலைகளில் விதிமுறை மீறி ஏராளமான பேனர்கள் முளைத்து உள்ளன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்றி பேனர் கலாச்சா ரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News