உள்ளூர் செய்திகள்

அடுத்த மாதம் 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2022-10-14 15:36 IST   |   Update On 2022-10-14 15:36:00 IST
  • சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும்.
  • குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள்,

சேலம்:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சங்கிரி, ஆத்தூர், மேட்டூர், மற்றும் ஓமலூர் நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 12-ந்தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

மக்கள் நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் என்னவெனில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரை–வாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும்.

மேலும் மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கும் மேல் முறையீடு கிடையாது. நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில், கீழ் கண்ட வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும். சமரசம் செய்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள்,

மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நலம் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாக பிரிவினை வாடகை விவ–காரங்கள்), விற்பனைவரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சனைகள், மேற்கண்ட வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படுவதால், யார் வென்றவர் தோற்றவர் என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், மக்கள் நீதி மன்றம் வழி வகை செய்கிறது.

இதற்கும் மேலாக மேற்படி மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பொதுமக்கள் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் வாக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு சேலம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்–குழுவின் தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News