நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மரவள்ளி ரகத்தை பயிரிட வேண்டும்
- அரூர் பகுதியில் உள்ள மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ள விவசாய நிலங்கள் கள ஆய்வு செய்தனர்.
- ஏத்தாப்பூர்-2 மரவள்ளி கிழங்கு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பாதிப்பிருக்காது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்கண்ணன், பரிந்துரையின் பேரில் பாப்பாரப்பட்டியில் உள்ள தோட்டக்கலை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நேற்று அரூர் பகுதியில் உள்ள மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ள விவசாய நிலங்கள் கள ஆய்வு செய்தனர்.
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா தலைமையில் விஞ்ஞானிகள் ராஜபாஸ்கர்( பூச்சிகள் துறை), சிவக்குமார் (மண்ணியல் துறை), செல்வமணி (நோயியல் துறை) அருண்குமார் (வானியல் துறை) உள்ளிட்ட குழுவினர் அச்சல்வாடி பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகளை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
அப்பொழுது அவர்கள் கூறுகையில், தற்போது தாக்கியுள்ள பூச்சிகளை மெஜிஸ்டர் 2 மிலியை 1 லிட்டர் தண்ணீர் மற்றும் காதி சோப் 1 கிராம் கலந்து இலைகளில் ஊடுருவி செல்லும் வகையில் அடிக்க வேண்டும்.
இலைகளின் கீழ் படும் வகையில் தெளிக்க வேண்டும்.விவசாயிகள் நோயின் தாக்குதல் அறிகுறி தெரிந்த உடனே தோட்டத்துறைக்குக்கோ அல்லது வேளாண்மை அறிவியல் மைத்திற்கோ தொடர்பு கொண்டால் உரிய ஆலோசனை வழங்கப்படும்.
சிலந்தி செம்பேன் வெயில் காலத்தில் தாக்குதல் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் தாக்குதல் குறைவாக இருக்கும், விவசாயிகள் வெளியில் இருந்து மரவள்ளிக் குச்சி ரகங்களை வாங்குவதால் புதுப்புது பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதனை தவிர்க்க மரவள்ளி ஆராய்ச்சி மையம் செயல்படும் ஏத்தாப்பூர் பல்கலை கழகம் சார்பில் தரப்படும் ஏத்தாப்பூர்-2 மரவள்ளி கிழங்கு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பாதிப்பிருக்காது.
தற்போது சிலந்தி செம்பேன் தாக்குதல் ஏற்பட்டுள்ள பயிர்களில் உரிய மருந்துகள் அளித்தால் விளைச்சலில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தனர்.
இந்த கள ஆய்வின் போது உதவித் தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்கண்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரோஜா,தோட்டக்கலை அலுவலர் சங்கீதா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், முன்னோடி விவசாயி திருமலை, மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.