உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2022-08-04 10:45 GMT   |   Update On 2022-08-04 10:45 GMT
  • மனைவியை சேர்த்து வைக்ககோரி செந்தில் குமார் இன்று காலை 5 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
  • தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். இவரது மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த மாதம் வடிவுக்கரசி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வராததால் செந்தில் குமார் மிகவும் மனவேதனையில் இருந்தார்.

அவர் ஏற்கனவே பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் மனைவியை சேர்த்து வைக்ககோரி செந்தில் குமார் இன்று காலை 5 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் இதுபற்றி போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் செல்போன் மூலம் பேசினார்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர் மனைவி வடிவுக்கரசியை அழைத்து வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்து விட்டார்.

இதனையடுத்து மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் இருந்து வடிவுக்கரசியை போலீசார் அழைத்து வந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டதுக்கு பின்னர் காலை 8 மணி அளவில் மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் செந்தில்குமார் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News