உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்- தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியீடு

Published On 2023-02-01 11:00 GMT   |   Update On 2023-02-01 11:01 GMT
  • மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
  • தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள இலஞ்சி கொட்டாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நவீன் பட்டேல் மகள் கிருத்திகா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் பட்டேல் மற்றும் அவருடன் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக, காதல் கணவர் வினித் கண்முன்னே கிருத்திகாவை தாக்கி ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் பேசும் கிருத்திகா தனக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி நான் திருமணம் முடித்து சந்தோசமாக இருப்பதாகவும், என்னை வைத்து ஏதேனும் பிரச்சனை நடைபெற்றால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் வாக்குமூலமாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

தற்போது, அந்த வீடியோவானது அவரது வழக்கறிஞர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் வழங்கப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் இந்த வாக்குமூலம் இந்த வழக்கில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து கிருத்திகாவை தேடி வரும் சூழலில், கிருத்திகா குஜராத்தில் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News