உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்

Published On 2023-05-16 12:08 IST   |   Update On 2023-05-16 12:08:00 IST
  • மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது.
  • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில்:

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News