உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் திடீர் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2024-01-08 06:43 GMT   |   Update On 2024-01-08 07:24 GMT
  • ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது.
  • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் குளிர் நிலவி வருகிறது.

மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுஇடங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இரவில் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

தொடர்ந்த பனிப்பொழிவு, குளிர் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலை மாறியது. மழை வருவது போல் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனிப்பொழிவும் அதிகளவில் இருப்பதால் மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது.

Tags:    

Similar News