கைதான கரண்-சசிகலா.
ரூ.10 ஆயிரம் பணத்திற்காக கட்டிட தொழிலாளி கொலை- கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது
- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
- பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பல்லடம்:
திருச்சி கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் முனீஸ்வரன், விக்னேஸ்வரன், சிவகாந்த பிரியதர்ஷினி ஆகிய 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி சிவகாமி இறந்துவிட்டதால் தனது மகன்களுடன் திருப்பூர் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனது சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கொண்டு கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. இது குறித்து திருச்சியில் உள்ள உறவினர்களிடம் ரேணுகா மற்றும் குடும்பத்தினர் விசாரித்த போது கந்தசாமி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கந்தசாமியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஒருவர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது அவர் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் கரண் (22) என்பதும் கந்தசாமியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
கந்தசாமி சொந்த ஊருக்கு சென்று பணம் கொண்டு வந்ததை தெரிந்த கரண், தனது கள்ளக்காதலி பழனி அருகே உள்ள புதிய ஆயக்குடியை சேர்ந்த சசிகலா (34) என்பவருடன் சேர்ந்து கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கந்தசாமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உடலில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் கரண், சசிகலா சிக்கிக்கொண்டனர். ரூ.10ஆயிரம் பணத்திற்காக தொழிலாளியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.