ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் எந்திரம் வெடித்து காயமடைந்த தொழிலாளி பலி
- கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது.
- திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காடரம்பாக்கம் பகுதியில் கார் சைலன்சர்களுக்கு கோட்டிங் அடிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்களான காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் குமார் (வயது26). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி(36), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26),ரஞ்சித் (26) ஆகிய 5 பேருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.