குன்னூர் அருகே பலா மரத்தில் ஏறி துதிக்கையால் பழத்தை பறித்து ருசித்த காட்டு யானை
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
- கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்படி வரும் யானைகள் பயிர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகள் அவ்வப்போது சாலைகளிலும் சுற்றி திரிந்து வாகனங்களை மறித்து வந்தன. இந்த பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
இதனால் யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அப்படி திரியும் யானைகள் பலாப்பழத்தை ருசித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வனத்தையொட்டி குடியிருப்புக்குள்ளும் நுழைந்து வந்தது.
இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே யானைை இங்கு இருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டு பணியில் ஈடுபட்டனர். நேற்று அந்த காட்டு யானைகளை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அப்போது யானைகள் அங்குள்ள சாலையை கடந்து மரப்பாலத்தை அடுத்த கே.என்.ஆர். பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அங்கு இருந்த பலா மரத்தை பார்த்ததும் யானைகள் துள்ளி குதித்து மரத்தை நோக்கி ஓடின.
அங்கு சென்றதும் 3 யானைகளில் ஒரு யானை தனது காலை தூக்கி மரத்தின் மீது வைத்து, துதிக்கையால் மரத்தில் இருந்த பலாப்பழத்தை பறித்து சுவைத்தது. இதனை அந்த வழியாக சென்றவர்களும், வனத்துறையினரும் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.