உள்ளூர் செய்திகள்

குடும்பம் நடத்த வராத மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

Published On 2022-10-28 15:07 IST   |   Update On 2022-10-28 15:07:00 IST
  • நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார்.
  • அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர் (வயது 55). இவரது மனைவி ரியாஸ் பேகம் (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் திருமணம் செய்து கொண்டு விட்டு பிழைப்புக்காக உடையார்பாளையம் வந்து குடியேறி உள்ளனர்.

ஜாபர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். இதற்கிடையே மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான ஜாபர் தனது சம்பள பணத்தை மனைவியிடம் கொடுப்பதில்லை.

அத்துடன் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரியாஸ் பேகம் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் உடையார்பாளையத்தில் வசித்து வந்தார். அங்கும் சென்ற ஜாபர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் ஜாபர் திருந்தவில்லை.

இந்தநிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் உடையார்பாளையத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜாபர், அவரை உடனே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினார். அதற்கு ரியாஸ் பேகம் மறுத்து விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மாமியார் மற்றும் பிள்ளைகளை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறும், மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜாபர் கூறியதால் அவர்கள் வெளியில் சென்றுவிட்டனர்.

நீண்ட நேரமாக சமரசம் பேசியும் ரியாஸ்பேகம் கணவருடன் குடும்பம் நடத்த செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் மனைவியை கீழே தள்ளிய ஜாபர் கடுமையாக தாக்கியுள்ளார். வெளியில் நிற்கும் தனது தாய்க்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்ற எண்ணத்தில் கணவரின் தாக்குதலை ரியாஸ் பேகம் பொறுத்துக்கொண்டார்.

ஆனாலும் ஆத்திரம் குறையாத ஜாபர், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆட்டை அறுக்கும் கூர்மையான கத்தியால் மனைவி என்றும் பாராமல் ரியாஸ் பேகத்தின் கழுத்தை கொடூரமாக அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரியாஸ் பேகம் ஒரு சில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஆனால் இந்த விஷயம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் மனைவியிடம் பேசுவது போன்று நாடகமாடியுள்ளார்.

மேலும் இறந்து கிடந்த மனைவியின் அருகிலேயே ஒரு பாயை விரித்து அதில் ஜாபர் படுத்துக்கொண்டார். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் ஜாபர், ரியாஸ் பேகம் இருவரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஜாபரின் மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரியாஸ் பேகம் பிணமாக கிடந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி அவர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ரியாஸ் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மனைவியை கொலை செய்த ஜாபர் நேராக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடையார்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News