ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் செல்பி எடுத்தபோது ரூ. 3 லட்சம் நகைகளை பறிகொடுத்த பெண் பக்தர்
- செல்பி எடுத்த மோகத்தில் சுஜிதா தனது கைப்பையை மறந்து விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
- சுஜிதா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்.இவரது மனைவி சுஜிதா(வயது 34).
சம்பவத்தன்று இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அங்குள்ள அலமேலு கோவிலுக்கு செல்லும் சந்திப்பில் ராமர், சீதை புகைப்படத்திற்கு அருகில் சுஜிதா, தனது கைப்பையை வைத்துவிட்டு செல்பி எடுத்தார்.
செல்பி எடுத்த மோகத்தில் சுஜிதா தனது கைப்பையை மறந்து விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்றார். திடீரென்று அவருக்கு ஞானோதயம் வரவே கைப்பை வைத்த இடத்தில் தேடிப் பார்த்த போது பையை காணவில்லை. அதில் ரூ. 3 லட்சம் நகைகள் இருந்தன.
இதுகுறித்து சுஜிதா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சாமி கும்பிட வந்திருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வெள்ளாங்குளம் பாண்டியபுரத்தைச் சேர்ந்த செல்வ மாரி(வயது 38)என்பவர், சுஜிதாவின் கைப்பை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி செல்வமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.