பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு
- பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி கிராம எல்லையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
- ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம் நம்பாக்கம், வெள்ளத்து கோட்டை, கூனிபாளையம் உட்பட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 35 அடியில் 34 அடியை தாண்டியது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் மொத்தமாக 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் பூண்டி எரியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.
பின்னர் பலத்த மழை இல்லாததால் பூண்டி எரிக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு நேற்று 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்து 5320 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு இன்று காலை முதல் 4 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2854 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி கிராம எல்லையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம் நம்பாக்கம், வெள்ளத்து கோட்டை, கூனிபாளையம் உட்பட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பூண்டிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. அவர்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தின் மீது முழங்கால் அளவுக்கு செல்லும் வெள்ளத்தை கடந்து சென்று வருகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்று தரைப்பாலத்தை கடந்து சென்ற 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து சென்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வெள்ளம் வடியும் வரை பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்காமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2745 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 611 கன அடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 813 மில்லியன் கன அடி நீர் தண்ணீர்இருப்பு உள்ளது. ஏரிக்கு 200 கனஅடி நீர் வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3228 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலமாக 1924 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 110 கன அடியும், ஏரியின் பாதுகாப்பு கருதி 1500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி காட்சி அளிக்கிறது.