உள்ளூர் செய்திகள்

மணலி அருகே பெண் தூய்மைப்பணியாளர் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு- கொலை செய்யப்பட்டாரா?

Published On 2022-08-07 14:34 IST   |   Update On 2022-08-07 14:34:00 IST
  • கடந்த வாரம் முதல் மைதிலி திடீரென மாயமானார்.
  • மைதிலி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், பூங்கா வனபுரம், 1- வது தெருவில் வசித்து வருபவர் மணி மாறன். இவரது மனைவி மைதிலி (வயது 34). திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவர், வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் மைதிலி திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் மணிமாறன் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அருகே மைதிலி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த புதன்கிழமை மைதிலி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கியதாக தெரிகிறது. இதனை கவனித்த கணவர் மணிமாறன் மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மைதிலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அருகே இறக்கி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் மைதிலி அப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

அந்த இடத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மைதிலி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக மணி மாறனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News