விருதுநகரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி
- விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உயர் மின் அழுத்த பாதையில் இன்று மதியம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
- ஒப்பந்த பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உயர் மின் அழுத்த பாதையில் இன்று மதியம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஒப்பந்த பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த உயர் அழுத்த மின் கோபுர பகுதி மின்கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த மின் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒப்பந்த பணியாளர்கள் வேலுமுத்து (வயது 36) மற்றும் முத்து ராஜ் (26) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் வேலுமுத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த முத்துராஜ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
மின் விபத்தில்பலியான வேலுமுத்து சித்தாளம்பு தூரை சேர்ந்தவர் ஆவார். படுகாயமடைந்த முத்துராஜ் வத்திராயிருப்பு அருகே குன்னூரை சேர்ந்தவர் ஆவார்.
உயர் அழுத்த மின் பாதையில் மின்சாரத்தை நிறுத்திவிட்டுதான் தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். அப்போது ஜெனரெட்டர் இயக்கப்பட்டதால் மின்கம்பிகளில் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக மின் வாரிய அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.