உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2023-09-22 08:15 GMT   |   Update On 2023-09-22 08:15 GMT
  • யானை குழி வெட்டுதல் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
  • வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வனவிலங்குகளால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில், பயிரிடப்பட்டுள்ள ராகி, கம்பு, சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை வனவிலங்குகள் தினமும் நாசம் செய்து வருகிறது.

இது குறித்து வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொது மக்கள், இன்று 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, பென்னாகரம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனப்பகுதியை ஒட்டி, தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் மற்றும் யானை குழி வெட்டுதல் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News