திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு கிராம நிர்வாக அலுவலர் பலி
- பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 34). இவர் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நாகாத்தாள். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் நாகாத்தாள் பழனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சாமிநாதன் தோப்புபட்டிக்கு வந்தார். பின்னர் மீண்டும் திருவள்ளூர் செல்வதற்காக அவர் புறப்பட்டார். ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தபோது மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விரைவு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ரெயில் என்ஜினில் சிக்கிக் கொண்ட அவரை டிரைவர் கவனித்து கோவிலூரை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியில் ரெயிலை நிறுத்தினார்.
ரெயில்வே இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான சாமிநாதனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து தாமதமானது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.