வேலூர் சாய்நாதபுரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 62 பவுன் நகை கொள்ளை
- பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 62 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா சென்ற எட்டியப்பன் குடும்பத்தார் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 62 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து எட்டியப்பன் வேலூர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.