உள்ளூர் செய்திகள்

வேலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை

Published On 2022-11-23 08:00 GMT   |   Update On 2022-11-23 08:00 GMT
  • கோவிலில் சாமியின் நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கும்பல் கொள்ளையடித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரையில் சிறிய மலை மீது வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. மிககுறுகிய காலத்தில் மக்கள் பெருமளவு பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக விளங்குகிறது. மலையடிவாரத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

நேற்று இரவு 2 பைக்கில் கொள்ளையர்கள் 4 பேர் இந்த கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பிகளால் கோவில் பூட்டு கதவுகளை உடைத்தனர். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.

அதற்குள் முருகர் கோவிலில் இருந்த வெள்ளிவேல்கள், 10 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், உண்டியலை உடைத்து பணம் மற்றும் திரவுபதியம்மன் கோவிலில் சாமியின் நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கும்பல் கொள்ளையடித்தனர். அவற்றை எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கள் பைக்குகளின் அருகே வந்தனர்.

அங்கு வந்த பொதுமக்கள் கும்பலை பிடிக்க முயன்றனர். மேலும் அவர்கள் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர். ஆனால் கொள்ளையர்கள் கைகளில் கத்தி, கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

அப்போது கிராம மக்கள் அவர்கள் மீது கற்கள் கட்டைகளை கொண்டு வீசினர். தடி ஒரு பைக்கின் சக்கரத்தில் பட்டது. இதில் பைக் கீழே விழுந்தது. அதிலிருந்த இரண்டு பேர் மற்றொரு பைக்கில் ஏறி இருட்டில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஒரு பைக்கைபோலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர் அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர். கோவிலில் இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Similar News