வேலூர் ஜெயில் அருகே நடுரோட்டில் பா.ம.க. பிரமுகர் அடித்து கொலை
- பெரியார் நகர் கடையில் இருந்து வெளியே வந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார்.
- இறைவன்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுார்:
வேலுார் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் மோகன் மகன் பிரகாஷ் (26). கட்டட மேஸ்திரி. அந்த பகுதி பாமக மண்டல செயலாளராக இருந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் பெரியார் நகரில் டிஜிட்டல் போர்டு கடை வைத்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகிய ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். சித்தேரி கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும் நடந்து முடிந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பிரகாஷ் பைக்கில் தொரப்பாடியில் இருந்து பெண்கள் சிறைச்சாலை வழியாக சித்தேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரியார் நகர் கடையில் இருந்து வெளியே வந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார். பிரகாஷ் அவரை மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினார்.
ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பிரகாஷ் தன்னை கொலை செய்ய வந்ததாக எண்ணிய ராமகிருஷ்ணன் அருகே இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் பிரகாஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடினார்.
சற்று தொலைவில் பிரகாஷின் தந்தை மோகன் என்பவர் சென்றுள்ளார். அவரது கண் எதிரிலே ராமகிருஷ்ணன் தாக்கியதில் மகன் சுருண்டு விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அதற்குள் அவர் இறந்துவிட்டதைப் பார்த்து கதறி அழுதார்.
கொலை சம்பவம் குறித்து அறிந்த வேலுார் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இறைவன்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமகிருஷ்ணன் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் டிரேஸ் செய்தபோது அவர் அல்லாபுரம், இறைவன்காடு, புளிமேடு ஆகிய இடங்களில் இருப்பதாக சிக்னல் காட்டியது.
இதைத்தொடர்ந்து தனிப் படையினர் அந்த பகுதிகளில் அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தி இரவு 8 மணியளவில் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ், ராமகிருஷ்ணன் இருவரும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு நடந்த வேலூர் மாநகராட்சி தேர்தலில் இருவரும் கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பித்தனர்.
இதில் பிரகாசுக்கு கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பு அளித்தது. இதனால் பிரகாசுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.