உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பியது

Published On 2022-12-25 04:57 GMT   |   Update On 2022-12-25 04:57 GMT
  • தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம்.
  • மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று வீராணம் ஏரியாகும். இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது.

காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அதிலிருந்து தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம். இது தவிர மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.

அதன்படி, தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக 14.95 கனஅடி நீர் வருகிறது. மேலும் கிளை வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளவான 47.50 அடியை நிரப்பாமல் ஏரியின் பாதுகாப்பு கருதி 46.50 அடி நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வீராணம் ஏரி இந்த ஆண்டு 6-வது முறையாக நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்குமேயானால் வெள்ளியங்கால் ஓடை, வி.என்.எஸ். மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். வீராணம் ஏரியினை சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News